Dr. Syama Prasad Mookerjee Research Foundation

சமரசமில்லாத தேசபக்தர் சியாம பிரசாத் முகர்ஜி

உலகின் தொன்மையான பண்பாடுகளில் தனித்தன்மைகளுடன் நீடித்து நின்று வருவது இந்திய நாடு. தேச முழுவதும் கலாசாரத்தால் பிணைக்கப்பட்டு, செல்வச் செழிப்பாலும், அளப்பரிய சாதனைகளாலும் சிறந்து விளங்கி, பிற நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாகப் பல நூறாண்டுகள் இருந்து வந்த நாடு நம்முடையது. தொடர்ந்து வந்த காலங்களில் ஒரு ஆயிரம் ஆண்டுகள் அந்நிய படையெடுப்பாளர்களாலும் காலனி ஆதிக்க சக்திகளாலும் இந்தியா ஆளப்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் நாட்டில் பேரிழப்புகளும், பெரும் சிதைவுகளும், சகிக்க முடியாத துயரங்களும் நடந்தேறின.

தொடர்ந்து பல்லாண்டுகளாக நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் கடும் போராட்டங்கள், எண்ணற்ற உயிரிழப்புகள், அளப்பரிய தியாகங்கள் ஆகியவற்றுக்குப் பின்னரே நம்மால் சுதந்திரம் பெற முடிந்தது. அந்த சமயத்தில் நம் முன் இருந்த பெரிய சவால்களில் முக்கியமானது நாட்டின் ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பது. அந்தப் பணியில் தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாமனிதர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆவார்.

தமிழகத்தில் அதிகமான அறியப்படாதவரான அவர், வங்காள மாநிலத்தில் 1901 ஆம் ஆண்டு ஒரு பெயர் பெற்ற கல்வியாளராக விளங்கிய  அசுட்டோஷ் முகர்ஜி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ஆரம்ப முதலே கல்வியிலே சிறந்து விளங்கிய அவர், கல்கத்தாவிலும் இங்கிலாந்திலும் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் தனது முப்பத்து மூன்று வயதிலேயே கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, இளைய வயதில் அந்தப் பொறுப்பை வகித்தவர் என்னும் பெருமையைப் பெற்றார். அந்த சமயத்தில் 1937 ஆம் வருடம் கவிஞர் ரவீந்தரநாத் தாகூரை அவர்களின் தாய்மொழியான வங்காளியில் முதல் முதலாக பட்டமளிப்பு உரை நிகழ்த்த வைத்தார்.

ஒரு கல்வியாளராகவே வாழ விரும்பிய அவரை அப்போதைய சூழ்நிலைகள் பொது வாழ்க்கைக்கு இழுத்தன. தனது இருபத்தெட்டு வயதிலேயே பல்கலைக்கழகப் பகுதியிலிருந்து சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பல வருடங்கள் மேலவையில் பணியாற்றி சுதந்திரத்துக்கு முன்னர் வங்காள மாநிலத்தில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். சுதந்திர இந்தியாவில் அமைக்கப்பட்ட நேரு தலைமையிலான அமைச்சரவையில் நாட்டின் முதல் உணவு மற்றும் தொழில் அமைச்சராக 1947-50 கால கட்டத்தில் பணியாற்றினார்.

அந்த சமயத்தில் முக்கியமாக நேருவின் பாகிஸ்தான் சம்பந்தமான அணுகுமுறை தவறானது; அது பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை  மக்களின் நலனுக்கு முற்றிலும் விரோதமானது என அவரிடம் எடுத்துரைத்தார். ஆனால் நேரு அதைக் கண்டு கொள்ளவில்லை. எனவே மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினார். பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேசத்தின் அனைத்து மக்களின் நலனுக்காக மாற்றுக் கட்சி அவசியம் எனக்கருதி முயற்சி எடுத்தார். அதன் அடிப்படையில் 1951 அக்டோபரில் பாரதிய ஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. முகர்ஜி அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1952 ஆம் வருடம் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று ஜன சங்க உறுப்பினர்களில் ஒருவராக இருந்து, பாராளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றினார். 1953 ஆம் வருடம் ஜம்மு-காஷ்மீர் அரசால் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் போது ஸ்ரீ நகரில் அகால மரணம் அடைந்தார்.

தனது ஐம்பத்திரெண்டு வயது கூட முழுமையாக நிறைவு பெறும் முன்னரே மர்மமான முறையில் உயிரிழந்த முகர்ஜி அவர்கள் நமது நாட்டுக்கு ஆற்றிய மூன்று முக்கியமான பணிகள் நினைவில் கொள்ளத் தக்கவை. முதலாவது இன்றைய மேற்கு வங்காளம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கிறது என்றால், அதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் டாக்டர் முகர்ஜி அவர்கள்.

ஆங்கிலேய அரசு இந்தியாவுக்கு 1946 ஆம் ஆண்டு அனுப்பிய கேபினெட் குழு சுதந்திரத்தின் போது நாடு பிரிக்கப்படாமல் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தை வைத்த போது, காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய இரண்டும் அதை ஏற்றுக் கொண்டன. ஆனால் பின்னர் அவை அந்தக் கருத்திலிருந்து பின்வாங்கின. அந்த வருடம் ஆகஸ்டு 16 ஆம் தேதியை முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா ’நேரடி நடவடிக்கை நாள்’ என அறிவித்தார். அன்று கல்கத்தாவில் கலவரம் வெடித்து தொடர்ந்து நான்கு நாள்கள் நீடித்தது. அப்போது சுமார் 15000 பேர் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டது.

அதற்கு முன்னர் தொடங்கி பிரிக்கப்படாத அப்போதைய வங்காளப் பகுதியில் மதவாத அரசியல் சக்திகள் பெரும்பான்மை மக்களை வஞ்சித்தன; தொடர்ந்து கலவரங்களை உண்டாக்கின. அதனால் உயிரழப்புகள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் உள்ளிட்ட பலவும் நடைபெற்று வந்தன.

பின்னர் ஆங்கிலேய அரசு தனது கருத்தை மாற்றி இந்தியா இரண்டாக பிரிக்கப்படும் என அறிவித்தது. அப்போது இன்றைய வங்காள தேச நாடு உள்ளிட்ட ஒட்டு மொத்த வங்காளப் பகுதி, கல்கத்தா நகருடன் பாகிஸ்தானுடன் இருக்க வேண்டும் என முஸ்லீம் லீக் விரும்பியது. அந்த சமயத்தில் வங்காள மாநிலத்தை கிழக்கு- மேற்கு என இரண்டாகப் பிரித்து, பெரும்பான்மை மக்கள் அதிகம் வாழ்ந்து வந்த மேற்கு வங்காளப் பகுதி கல்கத்தா நகருடன் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக மக்களைத் திரட்டி, போராடி அதில் முகர்ஜி அவர்கள் வெற்றி கண்டார்.

இந்திய நாட்டுக்கு அவரது இரண்டாவது பங்களிப்பு பாரதிய ஜன சங்க கட்சியை உருவாக்கியது. அப்போதைய நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி தேசிய ஒருமைப்பாட்டுக்கும், பெரும்பான்மை மக்களின் நலனுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது என உணர்ந்து அதற்கு மாற்றாக ஒரு வலுவான தேசியம் சார்ந்த கட்சி அவசியம் எனக் கருதி அவர் எடுத்த முயற்சி இப்போது பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் பதினெட்டு கோடிக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு உலகின் பெரும் ஜனநாயக கட்சியாக வளர்ந்துள்ளது.

அதனால் இப்போது நாட்டின் பதினெட்டு மாநிலங்களில் பாரதிய ஜனதாவை தனியாகவோ, கூட்டணியாகவோ மக்கள் ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ளனர். மத்திய அரசில் முதலில் திரு வாஜ்பாய் அவர்கள் தலைமையில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றது. தற்போது திரு மோடி அவர்கள் தலைமையை தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். டாக்டர் முகர்ஜி ஜன சங்க கட்சி தொடங்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கவில்லை எனில் இன்று நாட்டில் பாரம்பரிய மிக்க பாரதப் பண்பாட்டின் கூறுகளும், கலாசாரமும், ஆன்மிக விழுமியங்களும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்க கூடும். நாட்டில் குடும்பக் கட்சிகள் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் ஆதிக்கம் பெருகி, இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்க கூடும்.

டாக்டர் முகர்ஜி அவர்களின் மூன்றாவது முக்கிய பங்களிப்பு ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சம்பந்தப்பட்டது. அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் அவர்களின் ஆலோசனையைப் புறந்தள்ளி பிரதமர் நேரு பக்குவமற்ற முறையில் செயல்பட்டதால், காஷ்மீர் பிரச்னை உருவானது.  சட்ட நிபுணர் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பரிந்துரைக்கு மாறாக சட்டப்பிரிவு 370 மூலம் ஜம்மு –காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்தை நேரு அளித்தார்.

அதனால் அந்த மாநிலத்துக்கு மட்டும் தனி சட்டங்கள், மாநிலத்துக்கென தனி கொடி, வேறு மாநிலத்தவர் அனைவரும் அந்த மாநிலத்துக்குள் செல்ல தனியாக அனுமதிச் சீட்டு கட்டாயம் பெற வேண்டும் எனப் பல சலுகைகள் கொடுக்கப்பட்டன. அந்த மாநில முதல்வர் பிரதமரென அழைக்கப்பட்டார். எனவே இந்திய நாட்டுக்குள்ளேயே இன்னொரு நாடு போல செயல்படும் வகையில் நடைமுறைகள் வந்தன. முகர்ஜி அதைக் கடுமையாக எதிர்த்தார். ஜன சங்கம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

ஒரே நாட்டுக்குள் செல்ல இந்தியக் குடிமகன் எந்த அனுமதியும் பெற வேண்டியதில்லை என்பதை உணர்த்தவும், ஒரு மாநிலத்துக்கு மட்டும் தேவையற்ற சலுகைகள் சட்டத்துக்கு விரோதமானது  என்பதை வலியுறுத்தவும், முகர்ஜி அவர்கள் 1953 ஆம் வருடம் மே மாதம் ஜம்மு – காஷ்மீருக்குள் அனுமதியின்றி நுழையச் சென்றார்.  அப்போது திடீரென அனுமதியின்றி செல்லலாம் என அரசு அதிகாரிகள் அவரை அனுமதித்தனர். ஆனால் போகும் வழியிலேயே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் செயல்படுவதாக கூறி கைது செய்தனர். பின்னர் ஜம்மு – காஷ்மீரில் தூரத்தில் உள்ள ஸ்ரீ நகருக்கு கொண்டு செல்லப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் இதய நோயாளி எனத் தெரிந்தும் மருத்துவ வசதிகளற்ற தொலைபேசி கூட இல்லாத ஒரு தனிமையான பகுதியில் குடிசையில் தங்க வைக்கப்பட்டார்.

வீட்டுக் காவலில் நாற்பது நாட்களுக்கு மேலாகி தேவையான கவனிப்புகள் எதுவுமின்றி காய்ச்சலும் இதயத்தில் வலியும் வந்த போது, அவரைக் கூப்பிட்டுச் செல்ல ஆம்புலன்ஸ் கூடக் கொடுக்கப்படவில்லை. நடந்து சென்று டாக்சியில் ஏறித்தான் சென்றார். பத்து கிலோ மீட்டர் தூரம் பிரயாணம் மாநில அரசு மருத்துவ மனையின்  பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். இத்தனைக்கும் அவர் ஒரு கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்; முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சர். பின்னர் நான்கு நாட்கள் கழித்து ஜூன் 23 ஆம் நாள் உயிழந்தார்.

அவர் மரணத்துக்கு காரணம் கேட்டு நேருவிடம் அவரின் தாயார் உள்ளிட்ட பலரும் விசாரணை கோரினார். முக்கிய தலைவர்கள் மரணங்களில் சந்தேகங்கள்  எழும் போது உண்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க அரசு கமிசன்களை அமைத்து விசாரிக்கும். அப்படித்தான் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் மரணங்களுக்கு அரசு விசாரணை கமிசன்களை அமைத்தது. பிந்தைய நாட்களில் இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி மரணங்களுக்கும் விசாரணை கமிசன்கள் அமைத்து விசாரிக்கப்பட்டன. ஆனால் முகர்ஜியின் மரணம் குறித்து விசாரணை செய்ய நேரு மறுத்து விட்டார்.

எனவே முகர்ஜி அவர்கள் ஜம்மு – காஷ்மீர் ஒருங்கிணப்புக்காக போராடிய போது தனது உயிரையே நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டார். அவர் அன்று தொடங்கிய போராட்டம் 2019 ஆம் வருடம் மோடி அரசு சட்டப்பிரிவு 370 மற்றும் சம்பந்தப்பட்டவற்றை நீக்கிய போது நிறைவு பெற்றது. அதனால் அந்த மாநிலம் இன்று நமது தேசத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, தீவிரவாதம் வெகுவாக குறைந்து வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.

எனவே ஆரம்ப முதலே முகர்ஜி அவர்களுடைய பணி தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் எதிர்கால நலன் கருதியே அமைந்திருந்தது. தான் எடுத்துக் கொண்ட லட்சியங்களுக்காக வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த ஒரு சமரசமில்லாத தேசபக்தர், பணிகளுக்கிடையே தனது உயிரையே நாட்டுக்கு அளித்து விட்டார்.

(கட்டுரையாளர் செயலர் மற்றும் அறங்காவலர், டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனம், புது டெல்லி)

Author

(The views expressed are the author's own and do not necessarily reflect the position of the organisation)