ஜூன் 25 ஆம் தேதி இந்திரா காந்தி அரசு அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்து ஐம்பது வருடங்கள் முடிந்து விட்டன. அறிவிப்பைத் தொடர்ந்து வந்த இருபத்தொரு மாத காலம் சுதந்தர இந்திய வரலாற்றில் மிகவும் கறை படிந்த கருப்பு அத்தியாயம். 1950 ஆம் வருடம் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் முதன் முதலாக அப்போது ஆட்சி செய்து கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியால் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு, அத்துமீறல்களும் சொல்லொணாக் கொடுமைகளும் அரசாலேயே நிகழ்த்தப்பட்ட காலம். அதனால் தான் அந்த தினம் அரசியலமைப்புச் சட்டம் கொலை செய்யப்பட்ட நாள் என அனுசரிக்கப்படுகிறது.
1973 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மாணவர்கள் அங்கு ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நியாயம் கேட்டுப் போராடினார்கள். தொடர்ந்து 1974 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் மாணவர்கள் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். அப்போது இந்திரா அம்மையாரின் தவறான அணுகுமுறைகளால் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக ஆகியிருந்தது. எனவே ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் தலைமையில் நாடு தழுவிய முழுப் புரட்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றன.
1975 ஆம் வருடம் அலகாபாத் நீதி மன்றம் 1971 பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா அம்மையார் செய்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக அவரது தேர்தல் செல்லாது என தீர்ப்பளிக்கிறது. ஆனால் தீர்ப்பை மதிக்காமல் தான் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அவர் ஜூன் 25 இரவு அவசர நிலைப் பிரகடனம் செய்கிறார். அதற்காக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட முறைப்படி முன்னரே கூட்டவில்லை. அது மறுநாள் காலையில் தான் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டப்படி ஜனநாயகத்தின் மூன்று அடிப்படைத் தூண்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றங்கள் – பாராளுமன்றம், அதிகாரவர்க்கம் மற்றும் நீதித் துறை ஆகியவை உள்ளன. அவை ஒவ்வொன்றுக்குமான அதிகாரம் மற்றும் எல்லைகள் வரைமுறை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அந்த சமயத்தில் எல்லா அதிகாரங்களையும் பிரதமர் ஒருவரே எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்துக் கேள்வி கேட்பார்கள் என்று அரசு கருதிய நபர்கள் அன்று இரவு தொடங்கி எந்தவித முன்னறிவிப்புமின்றி கைது செய்யப்படுகின்றனர். பத்திரிக்கை சுதந்தரம் முற்றிலும் பறிக்கப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனி மனித உரிமைகள் கூட அரசால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி, அவசர நிலை அறிவிப்புக்கு எதிர்த்துக் குரல் கொடுத்த அறிவு ஜீவிகள், காந்தியவாதிகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், சோசலிஸ்டுகள், பத்திரிக்கையாளர்கள், காங்கிரஸ் கட்சியிலேயே முக்கிய தலைவர்களாக இருந்து அவசர நிலைப் பிரகடனைத்தை எதிர்த்த சந்திரசேகர், மோகன் தாரியா போன்ற தலைவர்கள் எனப் பலரும் கைது செய்யப்பட்டனர். ஜெயபிரகாஷ் நாராயணன், வாஜ்பாய், அத்வானி, நானாஜி தேஷ்முக், பெர்னாண்டஸ், மொரார்ஜி தேசாய், மது தண்டவதே, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் தேவ்ரஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அதில் அடக்கம்.
நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 1,30,000 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட முக்கிய தலைவர்களுக்கு அதிகப்படியான சிரமங்களைக் கொடுக்கும் வகையில் மிசா உள்ளிட்ட சட்டங்களின் பிரிவுகள் கடுமையாக்கப்பட்டன. அவற்றின் கீழ் 30,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த சமயத்தில் 26,000 அரசு அலுவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பலர் சிறைகளில் கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகினர். நிர்வாணப்படுத்தி அடிப்பது, சிறுநீரை மற்றவர் வாய்களில் கழிக்கச் செய்வது, விரல் நகங்களை வெளியில் எடுப்பது என்பதில் தொடங்கி பலவிதமான வக்கிரங்கள் நடந்தேறின. கேரளாவிலுள்ள கள்ளிக்கோட்டை பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ராஜன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பெற்றார். அவர் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் எனத் தெரிந்து கொள்ள அவர் தந்தையார் நீதி மன்றம் வரை சென்று கடுமையாகப் போராடினார். அவர் காவல்துறையினரின் அளவுக்கதிமான துன்புறுத்தல்களில் சிறையிலேயே மரணமடைந்து விட்டார் என்பது பின்னரே தெரிய வந்தது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்னேகலதா ரெட்டி ஒரு திரைப்பட நடிகை மற்றும் இயக்குநர். அவரது கணவரும் திரைத்துறையைச் சேர்ந்தவர். அவர் சோசலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் நண்பர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் ஸ்நேகலதா ரெட்டியின் உடல்நலக் கோளாறுகளுக்குத் தேவையான மருத்துவ வசதி கொடுக்கப்படவில்லை. எனவே நிலைமை மிக மோசமாகி, வெளியில் வந்த சில நாட்களில் தனது 45 ஆவது வயதில் உயிரிழக்க நேரிட்டது.
கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ஒரு பெண்மணி பிரசவத்துக்காக பெங்களூர் மருத்துவ மனைக்குக் கைகளில் சங்கிலிகளுடன் கொண்டு செல்லப்பட்டார். குழந்தை பிறந்தவுடன் கையிலிருந்த சங்கிலிகள் எடுக்கப்பட்டு, அவரது கால்கள் மருத்துவமனைக் கட்டிலில் கட்டப்பட்டன.
அரசை எதிர்த்த பத்திரிக்கைகள் பெரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சிரமங்களுக்கு ஆளாகின. உதாரணமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அலுவலகங்களில் மின் இணைப்பு துண்டிப்பு, நிர்வாகத்தின் மேல் கம்பெனி சட்டம் மற்றும் வருமான வரிச் சட்டப் பிரிவுகளை வைத்து வழக்குகள், கைதுகள், வங்கிகள் நியூஸ் பிரிண்ட் வாங்க பணம் கொடுக்க மறுப்பு உள்ளிட்ட பலவித சிரமங்களை எதிர்கொண்டது. அதன் நிறுவனர் கோயங்காவின் மேல் நாடு முழுவதும் 320 வழக்குகள் போடப்பட்டன. அவர் நீதி மன்றங்களில் நேரடியாக ஆஜராகமாலிருக்க விலக்கு மறுக்கப்பட்டது.
பிரபலமான திரைப்படப் பாடகர் கிஷோர் குமார் மத்திய அரசு விளம்பரத்துக்குப் பாட மறுத்ததால், அவரது பாடல்கள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டது. மகாத்மா காந்தி மற்றும் கவியரசர் தாகூர் ஆகியோரின் மேற்கொள்களை பத்திரிக்கைகளில் பிரசுரிப்பது தடுக்கப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21 ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமை மற்றும் தனிமனித உரிமைகளை அளிக்கிறது. அவை அவசர நிலைக் காலத்திலும் உள்ளனவா என்பது பற்றிய வழக்கு உச்சநீதி மன்றத்தின் ஐந்து பேர் அமர்வுக்கு வந்தது. அதில் நான்கு பேர் அவசர நிலைக் காலத்தில் அந்த உரிமைகள் மக்களுக்கு இல்லை என அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். ஆனால் நீதிபதி கன்னா அவை அடிப்படை உரிமைகள்; எனவே எப்போதும் இருக்கும் எனத் தீர்ப்பு வழங்கினார். சில மாதங்கள் கழித்து உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியாக அவரது முறை வந்த போது மத்திய அரசு அவரை நிராகரித்து, அவருக்கு ஜூனியராக இருந்து வந்த இன்னொருவருக்கு கொடுத்தது.
சிறைத்தண்டனை பெற்றவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் நீதிபதிகள் மட்டுமன்றி, லட்சக்கணக்கான சாதாரண மக்களும் பெரும் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். ஒரு கோடியே பத்து லட்சம் பேருக்கு மேல் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது. அதில் பத்து வயது சிறுவர்கள் தொடங்கி எண்பது வயது முதியவர்கள் வரை அடக்கம். ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கருத்தடைக்கான இலக்குகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் ஆட்களைப் பிடித்து வர கட்டாயப்படுத்தப்பட்டனர். அதனால் சாலையோரம் நடந்து செல்லும் அப்பாவிகள் உள்ளிட்ட பலர் கருத்தடைக்கு ஆளாயினர். சிலபேருக்கு இரண்டு முறை கருத்தடை செய்யப்பட்டது.
டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் பல லட்சக்கணக்கான ஏழைகளின் குடிசைகள் முன்னறிவிப்பின்றி தரை மட்டமாக்கப்பட்டன. அதனால் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் நிலை குலைந்தன. டெல்லியில் மட்டும் ஏழு லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இந்திராவின் மகனான சஞ்சய் காந்தி, குறிப்பிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எனச் சிலர் அனைத்து அதிகாரங்களையும் கையிலெடுத்து சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வந்தனர்.
எனவே அவசர நிலைக் காலம் என்பது அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக அத்துணை அதிகாரங்களையும் ஒருவரே தன்னிச்சையாக கையிலெடுத்து மக்களாட்சிக்கு விரோதமாக நடந்து கொண்ட இருண்ட காலம். அரசியமைப்புச் சட்டம் ஜனநாயக மரபுகள் பாதுகாக்கப்பட உருவாக்கிய அனைத்து கட்டமைப்புகளையும் மதிப்பிழக்கச் செய்த துர்ப்பாக்கியமான சமயம்.
ஆனால் அந்த சமயத்திலும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க லட்சக் கணக்கான பேர் துணிச்சலாகப் போராடினார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் தொடங்கி சாதாரண மனிதர்கள் வரை பல பேர் சிறை சென்றும், வெளியிலிருந்தும் பங்களித்தனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பலபேர் தலைமறைவாக இருந்து சிறை சென்ற சாதாரண மக்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வது, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது எனப் பணிகளை மேற்கொண்டனர்.
போராட்டத்துக்கு அதிகமான பங்களிப்பினை ஜனசங்கம், சோசலிஸ்டுகள், ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சில எதிர்கட்சிகள் வழங்கின. கைதாகிச் சிறை சென்றவர்களில் சுமார் ஒரு லட்சம் பேரும், மிசா சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களில் இருபத்தைந்தாயிரம் பேரும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜனசங்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
சுதந்தர இந்திய வரலாற்றின் மிக மோசமான காலகட்டத்தில் அசுர பலம் கொண்ட அரசாங்கத்தை எதிர்த்து தங்களின் சௌகரியங்களையெல்லாம் புறந்தள்ளி உயிர்களைத் துச்சமென மதித்து உரிமைகளுக்காகப் போராடியும், பணி செய்தும் வந்த பல்லாயிரக்கணக்கான தேச பக்தர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி செலுத்துவது நமது கடமையாகும். அந்த சமயத்தில் தங்கள் உயிர்களை இழந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆன்மாக்களுக்கு நமது அஞ்சலிகள்.
உலகிலேயே மக்களாட்சியின் தாய் என்று அழைக்கப்படும் நமது நாட்டில் அவசர நிலை மாதிரி ஒரு சூழ்நிலை மீண்டும் திரும்பி வர நாம் எப்போதும் அனுமதிக்கக் கூடாது.
(The views expressed are the author's own and do not necessarily reflect the position of the organisation)