Dr. Syama Prasad Mookerjee Research Foundation

சனாதனமே அனைவருக்கும் கல்வி கொடுத்தது; காலனியம் அதை அழித்தது

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது “நாமெல்லாம் படிக்கக் கூடாது என்பது தான் சனாதனத்தின் கொள்கை” என்று கூறியிருந்தார்.  அதற்கு முன்னர் ஆகஸ்ட் மாத இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியில்  தமிழக சபாநாயகர்  அப்பாவு பேசும் போது ” இந்தியாவில் முன்பொரு காலத்தில் சனதான தர்மத்தால் ஏழு சதவீத மக்களே கல்வி கற்க முடியும்” எனப் பேசியிருந்தார்.

சென்ற வருடம் ஜீன் மாதம் சபாநாயகர் அப்பாவு திருச்சியில் பேசும் போது ”கிறிஸ்துவ பாதிரியார்கள் தான் கல்வியை அனைவருக்குமானதாக ஆக்கினர்; சமூக சமத்துவத்தைக் கொண்டு வந்தனர்; திராவிட இயக்கமென்பது அவர்களது பணியின் நீட்சிதான்” என்று குறிப்பிட்டார். மேலும் ”கத்தோலிக்க பாதிரியார்கள் தான் தமிழக வளர்ச்சிக்கு முக்கிய காரணம்; தமிழகத்துக்கான அடித்தளம் அவர்களால் தான் போடப்பட்து; கத்தோலிக்க பாதிரியார்கள் இல்லாமல் இருந்திருந்தால், தமிழகம் பீகார் மாதிரி ஆகிப் போயிருக்கும்” எனவும் கூறினார்.  அவரது பேச்சு பற்றிப் பின்னர் கேள்விகள் எழுந்த போது தான் வரலாற்றைத் தான் பேசினேன் என்று விளக்கமளித்தார்.

திமுகவினர் தொடர்ந்து மேற்கண்டவாறு பேசிவருவதன் அடிப்படைக் காரணம் பழைய காலந்தொட்டு முந்தைய நூற்றாண்டுகளில் நமது நாட்டில் கல்வி முறை மிகப் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை  மக்களுக்கு மறுக்கப்பட்டு, உயர்சாதியினருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது; அதற்கு இந்து மதமும் சாதிய அமைப்புகளும் காரணமாக இருந்தன என்பதை நிறுவுவதற்காகத் தான். மேலும் ஆங்கிலேயர் வந்த பின்னரே இந்திய மக்கள்  பலருக்கும் கல்வி பரவலாக கிடைக்கப் பெற்றது என்ற எண்ணத்தையும் வலுப்படுத்தத்தான்.

மேற்கண்ட கருத்துருவாக்கத்தை உண்டாக்கியவர்கள் காலனி ஆதிக்க சக்திகள். அதனை திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பலவும் இன்று வரை தொடர்ந்து பரப்பி வருகின்றன. மேலும் பல ஆண்டுகளாக கல்வித்துறையை ஆக்கிரமித்து வந்துள்ள இடதுசாரிகளின் தாக்கங்களால் இதுவரை இந்தியக் கல்வி முறை பற்றி மாணவர்களுக்குச் சரியான விபரங்கள் சொல்லிக் கொடுக்கப்படவில்லை. அதனால் படித்தவர்கள் மத்தியில் கூட  நமது கல்வி முறை பற்றி முழுமையான புரிதல் இல்லை.

ஆனால் உண்மை என்ன? ‘கல்வி சிறந்த தமிழ் நாடு’ எனப் பாரதி ஏன் பாடினான்? ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்னரே முன் தோன்றி மூத்த மொழி’யான தமிழில் தொல்காப்பியமும், திருக்குறளும், அகத்தியமும், பல்வேறு உயர்ந்த இலக்கியங்களும் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக எப்படித் தொடர்ந்து உருவாகிக் கொண்டே வந்துள்ளன? சங்க இலக்கியங்களைப் படைத்தவர்களில் பல்வேறு  பின்னணிகளைக் கொண்டவர்களும் பெண்களும் இருந்து வந்துள்ளனரே? அது எப்படி  சாத்தியமாயிற்று? என்கின்ற கேள்விகளை நாம் எழுப்பும் போது நாம் உண்மையை நோக்கி நகர ஆரம்பிப்போம்.

பழைய காலந்தொட்டு உலக அளவில் இந்தியா கல்வியில் முன்னோடியாக இருந்து பல்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகளைப் புரிந்து வந்துள்ளது. உலகின் முதல் பல்கலைக் கழகம் 2700 வருடங்களுக்கு முன்னரே தட்சசீலத்தில் செயல்பட்டு வந்ததும், அப்போது உயர்கல்வி பெற உலக முழுவதிலிலும் இருந்து மாணவர்கள் வந்து படித்துச் சென்றதும் இன்று உலக முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விசயம். நாளந்தா பல்கலைக் கழகம் ஆசிய நாடுகளின் பல்கலைக் கழகமாக விளங்கி வந்தது பற்றி சீன யாத்ரீகர்கள் உள்ளிட்ட பலரும் பெருமையாக குறிப்பிட்டுள்ளனர்.  தொடர்ந்து முந்தைய நூற்றாண்டுகளில் வெவ்வேறு  பல்கலைக் கழகங்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளன.

அதனால் தான் கணிதம், கட்டிடக்கலை, அறிவியல், மருத்துவம், தொழில் நுட்பம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளிலும் இந்தியா முன்னணியில் இருந்து வந்துள்ளது.  மருத்துவத்துறையில் உலகின் முதல் புத்தகம் சுமார் 2600 வருடங்களுக்கு முன்னாலும், பொருளாதார- அரசியல் துறைகளில் புத்தகம் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னாலும் இங்குதான் எழுதப்பட்டன. ஆகையால் இந்தியா உலகின் பெரும் பொருளாதார சக்தியாகவும், பெரும் செல்வந்த நாடாகவும் விளங்கி வந்ததை சர்வதேச அளவிலான உறுதி செய்கின்றன.

முந்தைய காலங்களில் வித்தியாசமின்றி நமது தேசத்தில் கல்வி அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. மைத்ரேயி, கார்கி உள்ளிட்ட புகழ்பெற்ற பெண் தத்துவ ஞானிகள் ரிக் வேத்துக்குப் பங்களித்துள்ளனர். தமிழகத்தில் சங்க காலத்தில் சுமார் 2000 வருடங்களுக்கு முன்னரே வாழ்ந்த ஔவையார் புற நானூற்றில் ஐம்பது பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இன்று உலகெங்கும் வைணவத் தலங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் திருப்பாவையை எழுதியவர் ஆண்டாள். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த  தமிழகம் தந்த துறவி. நாச்சியார் திருமொழியை எழுதியதும் அவரே.

மகாத்மா காந்தி அவர்கள் 1931 ஆம் வருடம் வட்ட மேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்றார். அந்த சமயத்தில் அங்கு நடந்த கூட்டமொன்றில் இந்தியக் கல்வி பற்றி அவரிடம்  கேட்ட போது,  அப்போது இருந்ததை விட முந்தைய காலங்களில் நன்றாக இருந்தது எனவும்,  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மோசமாகி  வருவதாகவும் பதிலளித்தார். மேலும் இந்தியக் கல்வி முறை அழகான மரம் போல இருந்தாகவும், ஆங்கிலேயர்கள் அதை தோண்டி எடுத்து அப்படியே விட்டு விட்டனர் எனவும் குற்றம் சாட்டினார்.  அவரது கூற்றை நிரூபிக்க முடியுமா என ஆங்கிலேயர்கள் சவால் விட்டனர். சுதந்திரப் போராட்டத்தில் இருந்ததால் அவரால் அதற்கு நேரம் கொடுக்க முடியவில்லை.

சுதந்திரத்துக்குப் பின்னர் காந்திய அறிஞர் தரம்பால் அந்தப் பணியை மேற்கொண்டார். இங்கிலாந்து சென்று அங்கிருந்த ஆவணங்களை எல்லாம் திரட்டினார். ஆங்கிலேயர் ஆட்சியின் போது கணக்கெடுப்புகள் வாயிலாக களத்தில் நாடு முழுவதும் தொகுக்கப்பட்ட  விபரங்களைச் சேகரித்தார்.  பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலவி வந்த கல்வி முறை பற்றிய விபரங்களை  ’அழகிய மரம்- பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய பாரம்பரிய கல்வி’ என்ற தலைப்பில் புத்தகமாக  வெளியிட்டார்.

அந்த விபரங்கள் அப்போதைய மதராஸ் பிரசிடென்சியில் 1822-25 கால கட்டத்தில் நிலவிய கல்வி பற்றிய ஆய்வுகள்; 1820 களில் பம்பாய் பிரசிடென்சியில் நிலவிய கல்வி பற்றிய ஆய்வுகள்;  1835-38 கால கட்டத்தில் வங்காளம், பீகார் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்து முன்னாள் மத போதகர் வில்லியம் ஆடம் எழுதிய ஆவணங்கள் மற்றும் பஞ்சாப் பகுதியின் ஆரம்பக் கல்வி பற்றி ஜி.டபிள்யூ. லெய்ட்னர் 1882ல் தொகுத்தவை உள்ளிட்டவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவை.

அவை இப்போது திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் நம் தேசத்தின் கல்வி பற்றிச் சொல்லி வரும்  பொய்களை உடைத்தெறிகின்றன. அவற்றில் மூன்று முக்கிய விசயங்களை மட்டும் இப்போது எடுத்துக் கொள்ளலாம். அதிலும் இப்போது கல்வி பற்றிய விவாதம் நமது மாநிலம் பற்றி இருப்பதனால் அதைப்பற்றி அதிகமாக பார்க்கலாம்.

முந்தைய கால கல்வி பற்றி வைக்கப்படும் முதல் குற்றச்சாட்டு அப்போது கல்வி பரவலாக அதிக அளவில் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது. ஆனால் ஆங்கிலேயர்கள் நமது நாட்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் மற்றும் அவர்களின் ஆவணங்கள் கல்வி எவ்வாறு நமது நாட்டின் பல பகுதிகளிலும் விரிந்து பரவியிருந்தது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. அந்த கணக்கீடுகள் எடுக்கப்பட்ட கால கட்டங்களில் பாரம்பரிய பள்ளிக் கல்வி முறை அழிய ஆரம்பித்து விட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கிலேயர்கள் ஏற்கெனவே நமது கல்வி முறையை சிதைக்கத் துவங்கியிருந்தனர். எனவே இந்த புள்ளி விபரங்கள் நமது கல்வி முறை சிதைவுகளை எதிர்கொண்டு வரும்போது எடுக்கப்பட்டவை. அதற்கு முன்னர் கல்வி இன்னமும் நன்றாக இருந்தது என்று ஆங்கிலேயர்களே ஒப்புதல் வாக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் அந்தப் புள்ளி விபரங்களை எடுத்துக் கொண்டால் கூட அவை சராசரியாக நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது என்றும், பெரிய கிராமங்களில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் இருந்தன எனவும் எடுத்துக் காட்டியுள்ளன. 1830 கள் வரை அப்போதைய வங்காள மற்றும் பீகார் பகுதிகளில்  மட்டும் ஒரு லட்சம் பள்ளிகள் இயங்கி வந்தாக ஆடம்  குறிப்பிட்டுள்ளார்.

மதராஸ் பிரசிடென்சியைப் பொறுத்தவரை, அதன் கவர்னர் ஜெனராலாக 1820 முதல் இருந்து வந்த தாமஸ் முன்றோ  உள்ளிட்ட பலரும்  ” ஒவ்வொரு கிராமமும் பள்ளியைக் கொண்டிருந்தது” எனக் கூறியுள்ளனர்.  மன்றோ கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவ அதிகாரியாகவும் இருந்தவர்.  மேலும் சராசரியாக சுமார் ஐநூறு பேரிலிருந்து ஆயிரம் பேருக்கு ஒரு பள்ளி இயங்கி வந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு கல்வி மேல் ஜாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்தது; பிற ஜாதிகளுக்கு மறுக்கப்பட்டது என்பது. உண்மை நிலவரம் என்ன? இப்போதைய தமிழக நிலப்பரப்பை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால், சூத்திரர்களும், பிற ஜாதிகளுமே மாநில முழுவதும் அதிக எண்ணிக்கையில் படித்து வந்துள்ளது தெரிய வருகிறது. பிராமணல்லாத மாணவர்களே 78 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை பள்ளிகளில் இருந்துள்ளனர். பிராமண மாணவர்களின் எண்ணிக்கை மாவட்டங்களில் 8.6 விழுக்காடு முதல் 22 விழுக்காடு வரை இருந்துள்ளது. மாநில முழுவதும் சராசரியாக சுமார் 13 விழுக்காடு அளவு.

பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர் ஆகிய உயர் ஜாதிகளைத் தவிர சூத்திர மற்றும் பிற ஜாதி மாணவர்களின் எண்ணிக்கை மாவட்டங்களில் சராசரியாக சுமார் 70 முதல் 84 விழுக்காடு வரை இருந்து வந்துள்ளது. சூத்திர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 70 விழுக்காட்டுக்கு மேல் அப்போதைய கோயம்பத்தூர், திருச்சி, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் படித்து வந்துள்ளனர். முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மாவட்டங்களில் 2.4 விழுக்காடு முதல் பத்து விழுக்காடு வரை இருந்துள்ளது.

எனவே பிரமாணர்களே கல்வியை கைப்பற்றிக் கொண்டு, பிற ஜாதிகளுக்கெல்லாம் அதை மறுத்து வந்தனர் என்கின்ற வாதம் தவிடு பொடியாகிறது. கல்வியின் அவசியத்தை நமது முன்னோர்கள் புரிந்து வைத்து அதனால் கல்வியைப் பரவலாக்கி வைத்திருந்தனர். தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட தேசிய நூலகம் ஸ்காட்லாந்து ஆவணக் குறிப்புகள் இந்துக்கள் அளவுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் வேறு யாரும் இல்லையெனவும், கல்வி பெறுவதற்காக அவர்கள் மற்ற அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளவர்கள் எனவும் குறிப்பிடுகின்றன.

இந்தியக் கல்வி மற்றும் கலாசாரம் பற்றி ஆய்வுகள் செய்த  இலங்கை அறிஞர் ஆனந்த குமாரசாமி பாரம்பரிய அமைப்புகள் சிதைக்கப்பட்டதால்தான் அனைத்து ஜாதியினரும் பரவலாகப் பெற்று வந்த சமநிலை குறைந்தது எனவும், அட்டவணை ஜாதிகள் என்று இப்போது அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் மக்களின் தாழ்ந்த  நிலைக்கு காரணமாக அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவதாக வைக்கப்படுகின்ற வாதம் ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வி கொடுத்தனர் என்பது. உண்மை என்ன?  பொது யுகம் 1800 வரை இங்கிலாந்தில் பள்ளிக் கல்வி பொதுவாக கிடைக்காத பொருளாகவே இருந்தது. 1800 களின் தொடக்க காலத்தில் மதராஸ் பிரசிடென்சியில் இருந்து வந்த பள்ளிகளின் எண்ணிக்கையில் சுமார் பாதியளவே இங்கிலாந்து முழுவதும் இருந்து வந்துள்ளது. அதுவும் அங்கு பள்ளி நேரம் ஒன்றிரண்டு மணி நேரங்கள் மட்டுமே. இங்கு வருடங்கள். எனவே அங்கேயே கல்வி இல்லாத போது அவர்கள் இந்தியாவுக்கு கல்வி கொடுத்தார்கள் என்பது தான் ஏமாற்று வேலை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நமது கல்வி முறை சிதைந்து கொண்டிருக்கும் போது தான் இங்கிலாந்தில் அதிக அளவில் பள்ளிகள் அதிகரித்தன. அப்போது இங்கு நிலவி வந்த நமது பரவலான கல்வி முறையைத் தான்  ஆங்கிலேயர்கள் அவர்களின் நாட்டில் கல்வியைப் பரவலாக்கப் பயன்படுத்தியுள்ளனர். ஆடம் மற்றும் மதராஸ் (கலெக்டர்) ஆட்சியாளர்களின் ஆய்வுகள் இந்தியா பாரம்பரியக் கல்வியின் அழிவுக்கு ஆங்கிலேயர்களே காரணம் எனத் தெரிவிக்கின்றன.

எனவே பல நூறாண்டுகளாக இந்தியாவில் இருந்து வந்த அனைவருக்குமான கல்வி அமைப்பு முறையை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்தனர். கல்வி நிறுவங்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த உதவித் தொகைகள், வருமான ஆதாரங்களை எல்லாம் நிறுத்தினர். பின்னர் 1835 ஆம் ஆண்டில் மெக்காலே கல்வி முறை இந்தியாவில் திணிக்கப்பட்டது. அதன் பின்னர் முழுமையாக கல்வி சிதைக்கப்பட்டது. அதனால் எழுத்தறிவு பெற்றவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து 1891ல் வெறும் ஆறு விழுக்காடாக குறைந்து போனது.

அமெரிக்க அறிஞர் வில் துரந்த் 1930 ல் எழுதும் போது இந்தியக் கல்வி முறை ஆங்கிலேயர்களால் சிதைக்கப்பட்டதனால், அந்த சமயத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் நான்கு விழுக்காடாக குறைந்து போனதை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அதில் பெண்களின் பங்கு ஒன்றரை விழுக்காடு மட்டுமே. அந்தக் கல்வியும் அதிக கட்டணம் வசூலித்த பின்னரே  கொடுக்கப்பட்டது.  எனவே மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்த ஒரு நூறு வருட காலத்துக்குள் இந்தியாவில் கல்வி பெற்றவர் எண்ணிக்கை அகல பாதாளத்துக்குச் சென்று விட்டது.

மேற்கண்ட ஆதாரங்கள் இந்தியாவின் பாரம்பரியக் கல்வி முறை எவ்வாறு பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது என்பதை தெளிவாக காட்டுகின்றன. மேலும் தேசத்தின் பாரம்பரியக் கல்வி முறையை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்தனர் என்பதும், இங்கிலாந்து நாட்டில் கல்வி பத்தொன்பதாவது நூற்றாண்டு தொடங்கியே அதிகரிக்க தொடங்கியது என்பதும் தெரிய வருகிறது.

எனவே சனாதன தர்மம் கல்வியை அனைவருக்கும் கொடுத்து அதனால் தேசத்தை உலகின் முதல் நிலையில் வைத்திருந்தது. தமிழகத்திலும் கல்வி ஜாதி வித்தியாசமின்றி பலருக்கும் அதிக அளவில் கிடைக்கச் செய்தது. அதனால் இந்தியா உலக அளவில் வெவ்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வந்தது.

திராவிட –கம்யூனிச வாதிகள் இனி மேலாவது நமது தமிழகம் மற்றும் தேசத்தின் வரலாற்று உண்மைகளைப் படித்து தெரிந்து கொண்டு ஐரோப்பியர்கள் சொல்லிக் கொடுத்த பொய்களைப் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் பொய்களை திரும்ப திரும்ப சொல்லி தமிழ் கலாசாரத்தின் பெருமைகளையும், சனாதன தர்மத்தின் வரலாற்றையும் இனி மேலும் மறைக்க முடியாது. இல்லையெனில் உங்கள்  இயக்கங்களின் ஆயுள் காலங்கள் முடிவதற்கு முன்னரே, அவை மக்களால் ஜனநாயக முறையில் தூக்கி எறியப் படும்.

(The writer is Secretary & Trustee, Dr Syama Prasad Mookerjee Research Foundation, New Delhi)