நமது நாடு ஜி – 20 சர்வதேசக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்து அதன் உச்சி மாநாட்டை டெல்லியில் மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்த மறு நாள் செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, இந்திய பங்குச் சந்தையில் ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்ந்துள்ளது. அன்றைய தினம் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சுட்டிக் காட்டக் கூடிய குறியீட்டு எண்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் நிப்டி-50 இருபதாயிரம் புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளில் முதன்மையானதாக விளங்கும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி-50 குறியீடு 1996 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அது தேசிய பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் சுமார் 1600 பங்குகளில் மிக முக்கியமான ஐம்பது பங்குகளின் சராசரியை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பங்குகள் நமது பொருளாதாரத்துக்கு அடிப்படையாக உள்ள இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவை.
அவற்றின் மதிப்பு பங்குச் சந்தையில் வியாபாரத்துக்குக் கிடைக்கும் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 60 விழுக்காட்டுக்கு மேலானதாக உள்ளது. அதனால் நிப்டி -50 குறியீடு இந்திய நிதிச் சந்தை பற்றி பரவலான மதிப்பீட்டை அளிக்கும் தன்மை கொண்டது. மேலும் அதுதான் உலக அளவில் அதிக செயல்பாட்டுடன் வியாபாரம் செய்யப்படும் ஒப்பந்தமாக இருந்து வருகிறது.
1996-ல் அந்தக் குறியீடு ஆயிரம் புள்ளிகளை அடிப்படைக் குறியீட்டு எண்ணாக வைத்து உருவாக்கப்பட்டது. பின்னர் பதினோரு ஆண்டுகள் கழித்து, 2007 ஆம் வருடத்தில் அது ஆறாயிரத்தை தாண்டியது. மேலும் பத்து ஆண்டுகள் கழித்து 2017 ஆம் வருடம் அந்தக் குறியீடு பத்தாயிரத்தை தொட்டது. ஆகவே ஆரம்பித்த பின் இருபத்தொரு ஆண்டுகள் கழித்த பின்னர், அது பத்தாயிரத்தை எட்டியது.
தொடந்து அடுத்த ஆறு வருட காலத்துக்குள்ளாகவே இரண்டாவது பத்தாயிரத்தைத் தாண்டி, தற்போது இருபதாயிரத்தைக் கடந்துள்ளது. எனவே முதல் பத்தாயிரத்தைத் தொட இருபத்து மூன்று ஆண்டுகள் ஆன போது, இரண்டாவது பத்தாயிரத்தைத் தொட ஆறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குக் காரணம் நமது பொருளாதாரத்தில் அண்மைக் காலமாக ஏற்பட்டு வரும் வளர்ச்சியை ஒட்டிய நல்ல மாற்றங்களாகும்.
இத்தனைக்கும், கடந்த மூன்றாண்டு காலமாக உலக நாடுகள் அனைத்தும் கோவிட் பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரினால் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளன. 2020 மார்ச் மாதம் தொடங்கி, உலக நாடுகளின் பொருளாதாரங்களை கொரோனா தொற்று புரட்டிப் போட்டு விட்டது. அதிலிருந்து மீள்வதற்குள் போர் ஏற்பட்டு அதனால் கடும் விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
ஆனால் அவற்றையெல்லாம் மீறி இந்தியா உலக அளவில் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருந்து வருகிறது. கொரோனாவைக் கையாண்டதில் உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற நாடாக இந்தியா இருந்தது. எனவே இந்தியப் பொருளாதாரம் எதிர்பாராத இரு பெரும் சவால்களை முறியடித்து, திறமையான முறையில் முன்னேறி வருகிறது.
நிப்டி -50 குறியீட்டின் கடந்த இருபத்தேழு வருட கால பிரயாணம் முதலீட்டாளர்கள் நமது பங்குச் சந்தைகளின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதைக் காட்டுகிறது. இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடுகள், ஒழுங்கு கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள் ஆகியன பங்குச் சந்தைகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட வழிவகுத்து வருகின்றன. அதனால் உலக அளவில் மிகக் குறைந்த செலவில் செயல்பட்டு வரும் திறமையான ஒன்றாக இந்திய பங்குச் சந்தை விளங்கி வருகிறது.
குறிப்பாக நிப்டி -50 குறியீட்டின் அண்மைக் கால வளர்ச்சி மிக வேகமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதினைந்தாயிரத்தை அடைந்த குறியீடு, சுமார் இரண்டரை வருட காலத்தில் ஐயாயிரம் புள்ளிகளைக் கடந்து இருபதாயிரத்தை அடைந்துள்ளது. அதிலும் கடந்த ஐம்பத்தி இரண்டு வியாபார நாட்களில் மட்டும் ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து வந்துள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய மூலதனச் சந்தைகளின் மேல் வைத்துள்ள நம்பிக்கை அண்மைக் காலமாக தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிகிறது. கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலதனச் சந்தைகளின் வேகமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வருகின்றன.
நிப்டி-50 தொடங்கி கடந்த இருபத்தேழு ஆண்டுகளில் அதன் மேலான வருமானம் இருபது மடங்கு அதிகரித்துள்ளது என்பது இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை வலிமையைக் காட்டுகிறது. ஆகையால் தற்போது தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்து கொண்டுள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை ஏழரை கோடிக்கு மேலாக உள்ளது. எனவே சுமார் ஐந்து கோடி குடும்பங்கள் தங்களின் சேமிப்புகளின் ஒரு பகுதியையாவது நேரடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருவதாகத் தெரிய வருகிறது.
நிப்டி -50 குறியீடு இருபதாயிரம் புள்ளிகளைத் தொட்டிருப்பது இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு அசாத்திய சாதனை என தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி அஷிஷ் குமார் சௌகான் பெருமையாகக் குறிப்பிடுகிறார். அதிலும் இரண்டாவது பத்தாயிரம் புள்ளிகளை ஒரு ஆறு வருட காலத்துக்குள்ளாகவே அடைந்திருப்பது அதிகரித்து வரும் நமது பொருளாதார முன்னேற்றத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.