Dr. Syama Prasad Mookerjee Research Foundation

பகவான் பிர்சா முண்டா – பழங்குடி மக்களின் கதாநாயகர்

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெறுவதற்காக நமது தேசத்தின் பல பகுதிகளிலும் வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களும் போராடியுள்ளனர்.  அதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் சுதந்திரப் போராட்டத்தில்  பெரும் பங்கு வகித்துள்ளனர் என்பதாகும். துரதிர்ஷ்டவசமாக  அவர்களின் தியாக வரலாறு குறித்து வெளியில் அதிகம் தெரிவதில்லை.

அப்படி பழங்குடி இனத்தில் பிறந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நமது விடுதலைக்காகவும் கலாசாரத்தைக் காப்பாற்றவும் மக்களை ஒன்று திரட்டிப் போராடிய மாவீரன் பிர்சா முண்டா. அவரது அளப்பரிய துணிச்சல், வீர குணங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக பழங்குடி  மக்களால் தமது ’மண்ணின் தந்தை’ எனவும் ’பகவான்’ எனவும் இன்றளவும் வணங்கப்படுகிறார்.

அவர் 1875 ஆம் வருடம் நவம்பர் 15 ஆம் நாள் தற்போதைய ஜார்கண்ட் மாநில மலை வாழ்பகுதியில்  ஒரு  சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். பழங்குடி மக்களின் முண்டா என்னும் பிரிவைச் சேர்ந்தவர். அந்த சமயத்தில் அவரது தந்தை விவசாய வேலைகளுக்காக மலைவாழ் பகுதியிலுள்ள பல ஊர்களுக்கு இடம் பெயர்ந்தார். படிப்புக்கு பள்ளியில் சேர்வர்தற்காக பாதிரியார்களால் கிறித்துவ மதத்துக்கு மாற்றப்பட்டார். சில வருடங்களில் படிப்பு கொடுப்பது என்ற பெயரில்  தமது மக்கள் மதம் மாற்றப்படுவதை உணர்ந்து பள்ளியை விட்டு வெளியே வந்தார். தொடர்ந்து அவரது குடும்பமே தாய் மதம் திரும்பியது.

பின்னர் தமது மக்களின் கலாசாரத்தைக் காப்பாற்றுவதற்காக அவரது பெயரை ஒட்டி ’பிர்செய்ட்’என்ற பெயரில் ஒரு புதிய குழு உருவாக்கப்பட்டது.  முண்டா சமூக மக்கள் அவரது குழுவில் இணைய ஆரம்பித்தனர். அது ஆங்கிலேய ஆட்சியின் நடவடிக்கைகளுக்கு ஒரு சவாலாக அமைந்தது. மேலும் ஆங்கிலேயர் தான் தமது எதிரி என வெளிப்படையாக அறிவித்தார்.

பாரம்பரியமாக மலைவாழ் மக்கள் தங்கள் பகுதி நிலங்களை அவர்தம் சமூகங்களின் சொத்தாக  பாவித்து வந்தனர். ஆங்கிலேயர்கள் அந்த முறையை மாற்றி வெளியில் வாழ்ந்து கொண்டிருந்த இடைத்தரகர்கள், ஜமீன்தார்கள் மற்றும் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களை நில உடமையாளர்களாக மாற்றினர். அதனால் பழங்குடி மக்களின் பெரும்பான்மை நிலங்கள் அபகரிக்கப்பட்டு அவர்கள் விவசாயக் கூலிகளாக மாற்றப்பட்டனர். கூலி வேலை செய்பவர்களுக்கும் போதிய ஊதியம் இல்லை; அதே சமயம் அதிக வேலைப் பளுவினால்  கொடுமைப் படுத்தப்பட்டனர். அவர்களில் நிலம் வைத்திருந்த சிலரும் அளவுக்கதிகமாக வரி கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அன்றைய பழங்குடி மக்களின் முன் இரண்டு பெரும் அபாயங்கள் இருந்தன. ஒன்று, அவர்களின் வாழ்வாதரமான விவசாயம் பறிக்கப்பட்டது; இரண்டு பிரிட்டிஷாரின் மேற்பார்வையில் அந்த மக்களிடையே நடைபெற்று வந்த தீவிரமான மதமாற்றம். அதனால் அப்போதே முண்டா பிரிவில் பலர் மதம் மாற்றப்பட்டிருந்தனர். எனவே அந்நிய ஆட்சியினரின் அந்த இரண்டு செயல்பாடுகளையும் தமது மக்களின் துணையோடு அவர் தீவிரமாக எதிர்த்தார். அதற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தார். தமது மக்களை தாய் மதம் திரும்பச் சொல்லி அறிவுறுத்தினார்.

1895 ஆம் வருடத்திலேயே விக்டோரியா அரசியின் ஆட்சி முடிந்து முண்டா ஆட்சி ஆரம்பித்து விட்டது என அறிவித்தார். பழங்குடியின விவசாயிகளை அந்நியருக்கு வரி கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தினார். அதனால் ஆங்கிலேய அரசின் கைக்கூலிகளின் இடங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகள் உள்ளூர் மக்களால்  தாக்குதலுக்கு ஆளாயின.

கிறித்துவ பாதிரியார்களால் பாதிக்கப்பட்டிருந்த பழங்குடியினர் கலாசாரத்தை மீட்டெடுக்க கடுமையாகப் போராடினார். சர்ச்சுகள் மதம் மாற்றுவதையும், வரிகளை விதிப்பதையும் கடுமையாக எதிர்த்தார். பழங்குடி மக்களைத் தமது பாரம்பரிய மத முறைகளைத் தொடரச் சொன்னார்.

ஆங்கிலேய அரசினை எதிர்த்து அவர் உருவாக்கிய போர் முழக்கமான  “அரசியின் ஆட்சி முடியட்டும்; எங்களின் ஆட்சி அமையட்டும்” என்பது இன்னமும் ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார், மேற்குவங்கம், மத்திய பிரதேச பகுதிகளில் நினைவு கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர் நடத்திய பெரும் இயக்கத்தின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு பயந்தது. முண்டா பிரிவு மக்களிடையே  மட்டுமன்றி, உரியான் மற்றும் கரியா உள்ளிட்ட பல பிரிவுகளின் மக்கள் வாழ்ந்து வந்த பிற மலைவாழ் பகுதிகளிலும் அவருக்கு ஆதரவு பெருகியது.  அவர்களெல்லாம் அவரை தங்களின் ஒப்பற்ற தலைவனாக மதித்து மரியாதை செலுத்தினர்.

எனவே ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்தது. மத மாற்றத்துக்கு தடையாக விளங்கியதால், மதமாற்ற சக்திகள் அவருக்குத் தொந்தரவு கொடுத்து வந்தன. அதனால் தலைமறைவு வாழ்க்கை நடத்தி ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்ட ரகசிய கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.

பின்னர் 1900 வருடம் பிப்ரவரி மாதத்தில் காட்டுப்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். தமது ஆதரவாளர்கள் சுமார் 500 பேருடன் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காக ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஜூன் 9 ஆம் நாள் தனது இருபத்து நான்காவது வயதில் சிறையில் உயிர் நீத்தார்.

அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் முண்டா ஆற்றிய பணி மகத்தானது. வீரம் செறிந்த அவரது வாழ்க்கை மலைவாழ் பகுதிகளில் பின் வந்த காலங்களில் விடுதலைப் போராட்ட நிகழ்வுகளுக்கு ஆதாரமாக அமைந்தது. மேலும் தமது பாரம்பரியம் மிக்க கலாசாரத்தைக் காப்பாற்ற அவர் ஆரம்பித்து வைத்த முன்னெடுப்புகள் தொடர்ந்து வந்த காலங்களில் அந்த மக்களின் மாண்பினை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அச்சாரமாக அமைந்தன.

சுதந்திரத்துக்குப் பின்னர் தொடர்ந்து வந்த காலங்களில் தேச விடுதலைக்காகவும், நமது மண்ணின் கலாசாரத்தைக் காக்கவும்  போராடிய மலைவாழ் மக்களின்  தியாக வாழ்க்கை முறையாக அங்கீகரிக்கப்படாமல் இருந்தது.  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு பகவான் முண்டா அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 15 ஆம் நாள் ”பழங்குடியினர் கௌரவ தினம்”   ஆக  கொண்டாடப்படும் என அறிவித்தது. அப்போது முதல் வருடா வருடம் அந்த தினமானது மத்திய அரசாலும், பல மாநில அரசுகளாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜார்கண்ட மாநிலத்தில் ராஞ்சி நகருக்கு அருகில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகார பூர்வமான விழா நடத்தப்பட்டு வருகிறது.

ராஞ்சி விமான நிலையத்துக்கு பிர்சா முண்டாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஞ்சியில் அவர் மத்திய சிறையில் உயிரிழந்த இடத்தில் அவரது பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பிற பழங்குடியின சுதந்திர போராளிகளிகளின் விபரங்களும் வைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பழங்குடி மக்கள் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆற்றிய பணிகளை மோடி அரசு  ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாக பழங்குடி மக்களின் முன்னேற்றத்துக்காக வெவ்வேறு சிறப்பு திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த 2024 ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி  பிர்சா முண்டா அவர்களின் 150 ஆவது பிறந்த ஆண்டு  வருட முழுவதும் நாட்டின்  எல்லாப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. எனவே பிர்சா முண்டாவின் தியாக வரலாற்றை அறிந்து நமது மண்ணைக் காக்கப் போராடிய  அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

(நவ.15, 2024 பிர்சா முண்டா அவர்களின் 150 ஆவது பிறந்த ஆண்டு தொடக்கம்)

 

Author